April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு

1 min read

Medical study that benefits the poor

நீட் தேர்வை எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழையவிடக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் போராடி அதில் தோற்றுவிட்டன என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமே மாணவ-மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள்.
நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நீட்டை எதிர்ப்பவர்களின் முக்கிய குற்றச்சாட்டு. மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லையே என்ற ஆதங்கம். நீட் தேர்வை ஒழித்துவிட்டால் இந்தக் குறைபாடெல்லாம் நீங்கிவிடும் என்பது அவர்கள் வைக்கும் வாதம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நீட் தேர்வை இப்போதையுக்கு புறந்தள்ள முடியாதநிலை..
இந்த நிலையில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு ஆணையை பிறப்பித்தது. இதற்கு கவர்னர் உடனடியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதற்கும் பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் இறுதியில் ஒப்புதல் கிடைத்தது.
இதனால் இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகம் அடித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வந்தபின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் மிக சொற்ப அளிவிலேயே மருத்துவப்படிப்புக்கு தேர்வானார்கள். ஆனால் இப்போது நாம் எதிர்பார்த்த அளவைவிட அதிக அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகி வருகிறார்கள். அதுவும் நீட் தேர்வுக்கு முன்பைவிட இப்போது அதிக மாணவர்கள் தேர்வாகிறார்கள்.
கடந்த 2011&ம் ஆண்டில் தமிழகத்தில் 1945 மருத்துவ இடங்கள் இருந்தன. 2017&ம் ஆண்டில் 3,060 இடங்களாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 3650 சீட்டாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 2021&2022 கல்வி ஆண்டில் கூடுதலாக 1650 சீட்டுகள் கிடைக்கும்.
இந்த நிலையில்தான் தற்போது மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் கலந்தாய்வில் 235 அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதில் 224 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரியிலும் 4 பேருக்கு சுயநிதி கல்லூரியிலும் 7 பேருக்கு பல் மருத்துவத்திலும் இடம் கிடைத்துள்ளது. கலந்தாய்வு முடியும்போது அரசுப் பள்ளி மாணவர்கள் 406 பேருக்கு மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கும். கடந்த ஆண்டு 6 பேருக்குதான் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நாம் தெரிவது என்னவென்றால் இந்த உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இதனை பெருமையாக முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இந்த உள்ஒதுக்கீடை பெற 6&ம் வகுப்பு முதல் 12&ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும். இந்த சலுகை அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு கிடையாது.
தற்போது கிராமப்புறங்களில் போதுமான அரசுப்பள்ளிகள் இல்லை. அரசு உதவிப்பெறும் பள்ளிகள்தான் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிதான் இருக்கிறது. சில யூனியன் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிகூட இல்லாத சூழ்நிலை உள்ளது. மேலும் நடுத்தர கிராமங்களில் அரசு தொடக்கப்பள்ளிகூட இல்லாமல் உதவிபெறும் பள்ளிகள்தான் இருக்கின்றன. அந்த கிராமங்களில் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை அரசு உதவிபெறும் பள்ளியில்தான் சேர்ந்து படிக்க வைக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு சலுகை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
அதற்காக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சலுகைளை வழங்கக்கூடாது. காரணம் அது பிற்காலத்தில் பெரிய மோசடிக்கும் முறைகேட்டுக்கும் வழிவகுத்துவிடும்.
எனவே கிராமப்புறங்களில் மேலும் பல அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும். அல்லது தற்போதுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும்.
-கடையம் பாலன்.

About Author

1 thought on “ஏழைகளுக்கு எட்டிவிடும் மருத்துவப் படிப்பு

  1. 7.5 மருத்துவ இட இட ஒதுக்கீடு ஒரு சமூக சார்பு அல்லவா? 500+ மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கண்ணீரில் உள்ளனர்!
    சராசரி மாணவர்களுக்கு (130 மதிப்பெண்கள்) மருத்துவ இடங்களை வழங்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து (500 மதிப்பெண்களுக்கு மேல்) மருத்துவ இடங்களை பறிப்பது நியாயமா? வருடத்திற்கு 7 lakhs செலவிட முடிந்தால், சாதாரணமானவர் எவ்வாறு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க முடியும். ஏழைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் பெருமை எங்கே இருக்கிறது?
    -திலகர்.
    =====
    7.5% மருத்துவ உள் ஒதுக்கீடு பற்றி நன்கு அலசி எழுதி இருக்கிறீர்கள், பாலன். உண்மை என்னவென்றால், நீட் இல்லாத காலத்தை விட இப்போதுதான் அரசு பள்ளி மாணவர்கள் அதிக பலன் அடைந்துள்ளனர்.
    கடைசி பத்தி அரசுக்கு அருமையான யோசனை.
    -சிவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.