Fri. May 7th, 2021

Seithi Saral

Tamil News Channel

ரஜினிக்கு வலை விரிக்கும் கமல்; ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா?

1 min read

amal spreading the web to Rajini; Will the fans agree?

18/12/2020

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. கட்சியின் பெயர், சின்னம் கூட உறுதியாகிவிட்டது.
அவருக்கு முன்பாக கமல்ஹாசனும் கட்சியை தொடங்கிவிட்டார். அவர் தற்போது தனது பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் இறந்த பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவதாக கூறி ரஜினியும் கமலும் அரசியலில் குதித்தனர். இதில் கமல்ஹாசன் குறிப்பிட்டபடி கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் மருத்துவர்கள் கூறியதால் கட்சித் தொடங்க தயங்கினார்.
கமல்ஹாசன் தன்னை முதல்வர் வேட்பாளராகவே காட்டத் தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் அவர் ரஜினியோடு இணைந்து பணியாற்றுவீர்களா என்று கேட்டதற்கு காலம் வந்தால் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார். ஆனால் அதன்பின் அதுபற்றி அவர் ஏதும்பேசவில்லை.
தற்போது கமல்ஹாசன் ரஜினிக்கு வலைவரிப்பதுபோல் அடிக்கடி பேசுகிறார். நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு ரஜினியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவே அவரது பதில் உள்ளது.

முன்பு ரஜினிகாந்த் தனது கட்சி வெற்றிபெற்றால் இன்னொருவரை முதல்வராக நியமிக்கலாம் என்று யோசிப்பதாக தெரிவித்தார் அல்லவா? அதன்பின்தான் அந்த இன்னொருவர் தானாக இருக்கலாமே என்ற எண்ணம் உருவாகி இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆனால் இது சாத்தியமா என்பது கேள்விக்குறி.
ரஜினிகாந்துக்கு கமல் வலை விரித்தாலும் ரஜினி இதுவரை அதற்கு பதில் ஏதும் கூறவில்லை. பொதுவாக ரஜினிகாந்த்தே முதல்வராக வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புவார்கள். அவரது கட்சி வெற்றிபெற்றால் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் இன்னொருவருக்கு முதல்வர் பதவி கொடுக்க முன்வந்தால் அதை கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு கொடுக்க மாட்டார். காரணம் அவரது நோக்கம் எல்லாம் அரசியல் ஞானமும், திறமையும் உள்ளவரையே நாடுகிறது. தற்போதுகூட அவரது சிந்தனையில் சகாயம் இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது.
இன்னொன்று கமல்ஹாசனை ரஜினி பரிந்துரைத்தால் அதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்கள் இருவரும் பிரபலம் ஆகத் தொடங்கிய நாள் முதல் இருவரும் தங்களுக்கு தனித்தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக் கொண்டார்கள். பொது மேடைகளில் ரஜினியும் கமலும் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் பேசினாலும் ரசிகர்கள் மத்தியில் பகை உணர்வுதான் இருந்தது. அந்த போட்டிதான் இருவரது படங்களை வெற்றிபெற வைத்தது.
ரசிகர்களை வேறுபடுத்தியே அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டார்கள் என்றுகூட சொல்லலாம்.
இருவரும் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவர்கள் இருவரையும் வைத்து படம் எடுக்க முயற்சி நடந்தது. ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. ரசிகர்கள் மோதிக்கொள்வார்கள் என்று அவர்கள் கூறினார்கள். அப்படி இருக்கையில் ஆட்சியை மட்டும் இணைந்து நடத்த ஆசைப்படுவது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
-கடையம் பாலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *