April 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கட்சத்தீவோடு மீனவர்களின் வாழ்வையும் தாரை வார்த்துவிட்டார்களே

1 min read

They have ruined the lives of fishermen along with Katchathee

22.1.2021
கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்ததோடு தமிழக மீனவர்களின் வாழ்வையும் தாரைவார்த்துவிட்டார்களே என்று தமிழர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

ராமமேசுவரம் அருகே கடலில் பல தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் இலங்கை வசமும் பல தீவுகள் இந்தியாவுக்கும் சொந்தமானவை. இந்த தீவுகள் பெரும்பாலும் மணல் திட்டுக்களாகவே இருக்கின்றன. இங்கு மனிதர்கள் உயர்வாழும் அளவுக்கு போதுமான பரப்பளவு கிடையாது. ஆனால் இவைகள் வளம் கொழிக்கும் பூமியாகவே திகழ்கிறது.
அதுவும் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு பெரும் வரப்பிரசாதமாக விளங்கியது. அந்த தீவை இந்தியாகாந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். அப்போது இது பெரியதாக தெரியவில்லை. அதாவது தமிழக மீனவர்களுக்கு பெரும் இழப்பாக தோன்றவில்லை. காரணம் முதலில் இந்த தீவை இலங்கைக்கு கொடுத்தாலும் அதில் இரு நாட்டு மீனவர்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மீனர்கள் தங்கள் வலையை காயப்போட்டுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. இதனால் கச்சத்தீவு தானத்தை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. பின்னர் கச்சத்தீவு முழுவதும் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. அப்போதும் கூட அதன் பாதிப்பை தமிழர்கள் உணரவில்லை.
ஆனால் இலங்கையில் உள்நாட்டு போர் தலைதூக்கியபோதுதான் கச்சத்தீவின் அருமை நமக்கு தெரிய ஆரம்பித்தது. விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக கூறி நம்நாட்டு மீனவர்களை விரட்டி அடித்தது இலங்கை கடற்படை.
இப்போதுதான் இலங்கையால் சாதாரண மீனவர்களுக்கும் பாதிப்பு உருவானது. கட்சத்தீவு அருகேயே நம்மால் செல்லமுடியாத நிலை உருவானது. அது தங்கள் கடல் எல்லை பகுதி என்று இலங்கை சட்டம் பேசியது. அதுவும் உண்மைதானே. கச்சத்தீவை தாரை வார்த்தப்பிறகு அந்தத் தீவை மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள கடல் பகுதியும் அவர்களுடையதுதானே. அந்தப் பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர். ஆனால் தமிழக மீனவர்களால் அந்த பகுதிக்கு தெரிந்தோ தெரியாமலோ செல்லாமல் இருக்க முடியாது. காரணம் அந்தத் தீவை சுற்றி பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. அங்குதான் மீன்கள் செழிப்பாக உள்ளன. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள கடல் பகுதி ஆழம் அதிகமாக கிடையாது. எனவே பவளப்பாறை உள்ள இடத்தில்தான் மீன்கள் அதிகம் இருக்கும். அந்த இடத்திற்கு செல்லாமல் யாராலும் போதிய அளவு மீன்பிடிக்க முடியாது.
இப்போதுதான் நாம் கச்சத்தீவுவோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் போய்விட்டது.
எண்ணற்ற மீனவர்களின் உயிரை நாம் பறிகொடுத்துவிட்டோம். இப்போது 4 மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் பரிதாபமாக இறந்துபோனார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியான் (வயது 28), உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் (25), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவில் நடுக்கடலில் மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்து மீனவர்களின் படகு மீது வேகமாக மோதியது. இதனால் அவர்கள் அந்த படகு நிலைகுலைந்து மூழ்கும் நிலைக்குச் சென்றது. இதனால் பயந்துபோன அந்த மீனவர்கள் மற்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் அங்கே இலங்கை கடற்படை நின்று கொண்டிருந்ததால் அவர்களால் அங்கே சென்று அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் படகு மூழ்கி 4 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடலில் மிதந்து கொண்டிருந்த 2 உடல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான் என்பதும், மற்றொருவர் திருப்புல்லாணியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது.
நேற்று சாம்சன், நாகராஜ் ஆகியோரது உடல்களும் இலங்கை கடல் பகுதியில் மிதந்தன. அந்த 2 உடல்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீர்வுதான் என்ன?

மீனவர்கள் சாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய&-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அரங்கேற்றி இருப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் ஒப்பிட்டு கூறி வேதனை அடைந்தார்கள்.
இதுதரவிர இன்னொரு காரணமும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கையில் பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரம் பற்றி பேசினார். மேலும் கட்சத்தீவு பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது. இதன் ஆத்திரமாக கூட இந்த 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
எனவே இந்த விசயத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். இப்போது கட்சத்தீவை மீட்க வேண்டும். அதற்கான பேச்சை வெளிப்படையாக இப்போதே அரசின் சார்பாக பேச வேண்டும். கட்சத்தீவு நமக்கு உடனடியாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படி ஒரு பேச்சு வந்தாலே நமது மீனவர்கள் மீது தாக்குதல் வெகுவாக குறையும் என்று நம்பலாம்.
எனவே இப்போது தேர்தல் வர இருக்கிறது. அப்போது அரசியல் கட்சிகள் குறிப்பாக தேசிய கட்சிகள் கச்சத்தீவை பற்றிய பேச்சை வாக்குறுதிகளாக கொடுக்க வேண்டும். அதுதான் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு வழியாக அமையும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.