சிறுமி கூட்டு பலாத்காரம் -3பேர் கைது, சிறையிலடைப்பு
1 min read
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்டதால் தனது தாயுடன் சித்தி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6ம்தேதி மாலை சிறுமி இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள வயலிவெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 3 வாலிபர்கள், சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இச்சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அப்போது அழுதபடி வந்த சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுமியின் சித்தி வாணியம்பாடி போலீசில் புகார் கொடுத்தார். டிஎஸ்பி பாலசுப்பிரமணி உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(24), பார்த்தீபன்(26), சந்துரு(28) என தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3பேரையும் 8ம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.