முட்டாளின் மூளையில் முந்நூறு பூ மலரும்…/ சொல் ஆராய்ச்சி / சிவகாசி முத்துமணி
1 min readTamil Ilakkilam By Sivakasi Muthumani
“முட்டாள்” – நான்கு எழுத்துகளில் அமைந்த இந்தச் சொல் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் வகுப்பறைகளில் மிகவும் பிரபலம். நம் ஆசிரியர் நாவில் நாள்தோறும் தவறாமல் வந்து போகும் நல்ல சொல் .சரியாகப் பாடம் படிக்காத மாணவனைத் திட்டுவதற்கு இச்சொல் தான் முந்தி வந்து நிற்கும்.
“முட்டாளே, சோறுதானே தின்கிறாய். கம்பராமாயணத்தை எழுதியவர் இளங்கோ என்று சொல்கிறாயே?. கேள்வியிலேயே பதில் இருக்கிறது, தெரியவில்லையா?”என்று திட்டுவார் ஆசிரியர்.அதில் செல்லமாக முட்டாள் கழுதை என்று திட்டுவதும் சில நேரங்களில் நடக்கும். முட்டாள் என்று ஆசிரியரிடம் வசவு வாங்காதவர் நம்மில் எவராவது ஒருவர் உண்டா?
ஒரு ஊரில் நான்கு முட்டாள்கள் இருந்தார்கள், என்று கதை சொல்லத் தொடங்குவோம். நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, என்று பாடலும் இயற்றுவோம். நல்லாப் படிச்சவங்க ஒருவனை முட்டாள் என்று சொன்னால், முட்டாள் என்பவன் படிக்காதவன், கல்வியறிவு இல்லாதவன் என்பது பொருளாகிறது அல்லவா?.
படித்தவன் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால், அவனைப் படித்த முட்டாள் சொல்லும் பழக்கமும் நமக்கு உண்டு. சிந்திக்கத் தெரியாத பொதுமக்களை முட்டாள் ஜனங்கள் என்று பெரியவர்கள் சொன்னார்கள். எதையாவது ஒரு செயலைத் தவறாக செய்துவிட்டு, மூளையைக் கடன் கொடுத்துவிட்டு நான்தான் முட்டாள் தனமாக இதைச் செய்து விட்டேன் என்று வருந்துவோம்.
அப்படியானால் முட்டாள்தனம் என்பது அறியாமையா? இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மூளை இல்லாதவன் தான் அதாவது, அறிவு இல்லாதவன்தான் முட்டாள் என்பதுதானே நாம் கொள்ளும் பொருள். ஆங்கிலத்தில் Fool என்பதை குறிக்க முட்டாள் என்ற சொல்லை மட்டும் நாம் பயன்படுத்துவதால் அவர்கள் ஆங்கிலத்தில் distilled fool என்று சொல்வதைக் கூட வடிகட்டிய முட்டாள் என்றே குறிப்பிட்டு வருகிறோம்.
முட்டாள் என்னும் சொல் அறிவில்லாதவன் என்னும் பொருள் தருவதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைப்பது சரிதானா?. நடைமுறையில் அறிவில் குறைந்தவன் என்று பொருள்படும் மடையன் மட்டி, மக்கு, பேதை, மிலேச்சன், அறிவிலி, அசடன் என்ற சொற்களை எல்லாம் முந்திக்கொண்டு முட்டாள் என்னும் சொல்தான் நம் பேச்சிலும் எழுத்திலும் பெரிதளவில் பயன்பட்டு வருகிறது.
ஆனால் நம் இலக்கியத்தில் முட்டாள் எனும் சொல் அறிவில்லாதவன், அறிவிலி, என்னும் பொருளில் பயன்பட்டதாகத் தெரியவில்லை. அறிஞன் என்பதற்கு எதிர்ச்சொல் அறிவிலி, அசடன்’ அறிவிலான் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேதை என்பதற்கு எதிர்ச் சொல்லாகப் பேதை எனும் சொல்லும் இருக்கிறது. அறிந்தவன் அறியாதவன் என்னும் சொற்கள் முரண்பட்டு நிற்கின்றன. வீரமாமுனிவர் படைத்த நகைச்சுவை இலக்கியமாகிய பரமார்த்த குரு கதையில், குருநாதருக்கு ஐந்து அறிவில்லாத சீடர்கள். அவர்கள் மட்டி, மடையன், மூடன் ,மிலேச்சன், பேதை. இவர்களில் முட்டாள் என்ற பெயர் எவனுக்கும் இல்லை.
அகராதியை எடுத்துப்பார்த்தால் முட்டாள் என்னும் சொல்லுக்கு பரு வேலையாள் என்னும் பொருள் காணப்படுகிறது. பின்னாளில் உண்டான அகராதியில் இச்சொல்லுக்கு பிறகு மூடன் எனும் பொருளும் தரப்படுகிறது.
மடம் என்றால் அறியாமை. அறியாமை உள்ளவனை, மடையன் என்று சொல்லலாம். மூடத்தனம் என்பது அறியாமையில் இருந்து வேறுபட்டது. தான் அறிந்த ஒன்றே சரியானது என்று ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவனை மூடன் என்று சொல்லலாம்.
மூடர் கூடம் என்று ஒரு திரைப்படம் கூட வந்தது.
“அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” என்று வள்ளுவர் அறிவுடையார் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக அறிவிலார் என்னும் சொல்லைக் கூறுவார்.
அப்படியானால் முட்டாள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைச் சற்று நிதானமாக சிந்திப்போம்.
முட்டு+ ஆள்.. முட்டாள்.
என்று இச்சொல்லைப் பிரிக்க வேண்டும். முட்டு எனும் சொல் அறியாமை என்னும் பொருள் உணர்த்தும் சொல் அன்று. அப்படியானால் முட்டாள் எனும் சொல் ஒன்றும் அறியாதவன் என்னும் பொருளில் வருவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். முட்டாள் என்னும் சொல்லில் ஆள் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு ஒரு கட்டுரையில் ஆள் என்னும் சொல்லில் இருந்துதான் ஆளுமை, ஆட்சி போன்றவை பிறக்கின்றன, என்று சொன்னோம். அந்த அடிப்படையில் முட்டாள் என்பவன் ஆளுமையே இல்லாதவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா?.
அவன் ஏதோ ஒரு காரியத்திற்குப் பயன்பட்டிருக்கிறான். அவனிடமும் ஆளுமை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அச்செயலை சிறப்பாகச் செய்யும் அளவிற்கு,அதைப் பற்றிய அறிவு அவனுக்கு உண்டு. அதை அவனால் சிறப்பாகச் செய்ய இயலும் என்று முடிவு செய்யலாம்.
அப்படியானால் முட்டு என்னும் சொல்லின் பொருள் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். முட்டுக் கொடுத்தல் என்னும் தொடரை எடுத்துக் கொள்வோம். இத்தொடர் எங்குப் பயன்படுகிறது. வீட்டில் வளர்க்கும் சிறிய மாமரத்தின் கிளை ஒன்று மழையால் சிறிது முறிந்து, கீழே விழாமல் நிற்கிறது. அக்கிளையில் நிறைய பிஞ்சு பிடித்திருக்கிறது. உடனே நாம் அக்கிளையைப் பாதுகாக்க ஒரு நல்ல வலுவான மரக் குச்சியை எடுத்து உடைந்திருக்கும் கிளையின் சரியான உயரத்திற்கு வெட்டி அதற்கு உறுதுணையாக அது கீழே விழுந்து விடாத அளவிற்கு அதற்கு கீழே ஒரு முனையை வைத்துகுச்சியின் அடிப்பகுதியை தரையில் வலுவாக வைத்து விடுவோம். இதற்கு பெயர் முட்டுக் கொடுத்தல்.
என் காதலுக்கு என் காதலியின் தந்தை முட்டுக்கட்டையாக இருக்கிறார். காதலரைச் சேரவிடாமல் தடுக்கிறார். அதைப் போல இந்தக் கிளை கீழே விழுந்து விடாமல் தடுக்கிறது அந்த முட்டு. மரத்தின் கிளையை தரையைத் தொட்டு விடாமல் தடுத்து நிறுத்திக் கொள்கிறது. காதலியைத் தன் பக்கம் சேரவிடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறார்.
இதிலிருந்து முட்டு என்பது ஏதோ ஒன்றுக்குத் தடையாக நிற்கும் பொருள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கிளை உடைந்து கீழே விழாமல் தடுப்பது முட்டு. காதலி காதலனை தேடி வந்து விடாமல் தடுப்பது முட்டுக்கட்டை. ஆக முட்டு என்பது ஒரு கட்டையாகவும் இருக்கிறது. மரத்தால் ஆன கதையாக இருக்கிறது. மரத்திற்கு கொடுக்கும் மூட்டு என்பதில் மிகச்சரியாக அந்த மரக்கட்டையைக் குறிக்கிறது. முட்டுக்கட்டை என்னுமிடத்தில் உருவாக பொருளாக இருக்கிறது.
மேலே சொன்னதில் இருந்து மூட்டு என்பதை அல்லது முட்டு மரத்தைக் கையாளும் ஒருவனை முட்டாள் என்று கொள்ளலாமா?
இப்போது கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்குச் செல்வோம். இன்னும் இச்சொல்லை தெளிவாக்கிக் கொள்ள… சிற்றூர்களில் அம்மன் கோவில் திருவிழாக்களில் எட்டு நாட்கள் அல்லது பத்து நாட்கள் நடைபெறும். அம்மன் கோவிலாக இருந்தால் அம்மன் கொடை என்று அழைப்பார்கள். கொடை நடைபெறும்போது நாள்தோறும் இரவில் அம்மன் வீதி உலா செல்வது வழக்கம். சக்கரம் வைத்து இழுக்கும் தேர் கிடையாது. சப்பரம் என்று அழைக்கப்படும். பக்தர்கள் தோள் மீது தூக்கி சுமந்து செல்லும் வகையில் ஜோடனை செய்யப்படுவது சப்பரம்.
வாகனத்தில்(காளை மாடு சிங்கம் போன்று மரத்தால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்) அம்மன் சிலை சாமி சிலை வைக்கப்படும். அதனைச்சுற்றி அலங்காரம் செய்து தோளில் தூக்கிச் செல்வதற்கு ஏற்றபடி இரண்டு அல்லது நான்கு நீளமான பருத்த மூங்கில் கழைகள் அமைக்கப்படும். அதைப் பிடித்து மேலே தூக்கி தங்கள் தோள்களில் நிறுத்திக்கொண்டு ஒவ்வொரு வீதியாகச் செல்வார்கள். குறைந்தபட்சம் முன்பக்கம் பத்துப் பன்னிரண்டு நாட்கள் பின்பக்கமும் அதே அளவில் ஆட்கள் தேவைப்படுவர்.
தெய்வத்தைத் தூக்கி சுமக்கிறோம் என்று பெருமையோடு மகிழ்ச்சியாகச் செல்வார்கள். அதனால் தோள்களில் பாரம் தெரிவதில்லை. தெருக்கள் தோறும் செல்லவேண்டும். ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்குத் திரும்ப வேண்டும். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சிறிது நேரம் நிறுத்தி செல்ல வேண்டும் அவ்வீட்டில் உள்ளோம் வழிபாடு செய்வதற்காக. இப்படி ஏறத்தாழ இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த உலா மீண்டும் திருக்கோவிலை அடைய அதிகாலை ஐந்து மணி ஆகிவிடும். அதுவரை அவர்கள் சுமக்க வேண்டும் அல்லவா?.
தோளில் ஏற்றிய சப்பரத்தை இறக்கி கீழே வைக்கக்கூடாது. எப்போதும் சுமந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?. அதற்கான ஒரு உத்திதான், சுமந்துகொண்டு போகும்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அல்லது ஊரின் முக்கியமான பகுதிகளிலும் சப்பரம் நிறுத்தப்படும் போது, தரையில் வைத்து விடாமல் இருப்பதற்காக முட்டுக் கொடுக்கப்படும்.
குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட உயரத்தில் மரத்தாலான கட்டைகள் சம்பளத்தோடு சேர்த்து கொண்டு செல்லப்படும். ஒரு வீட்டு வாசலில் நின்றுவிட்டால் தோலில் வைத்திருப்போர் சற்று நேரம் தங்கள் தோள்பட்டையை விட்டு விலக்கி ஓய்வு கொடுப்பது வழக்கம். அந்த நேரத்தில் சப்பரத்தைத் தூக்கும் மூங்கில் கம்பில் நுனிப் பகுதியும் தரையில் அடிப்பகுதியும் சேர்ந்துகொண்டு முட்டு கொடுப்பதற்காக அந்தக் குச்சிகள் பயன்படும். ஏறத்தாழ ஒரு ஆள் உயரத்திற்குத்தான் அக் கட்டைகள் இருக்கும். ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட முட்டுகள் கொடுத்தால்தான் சப்பரம் சாயாமல் அப்படியே நிற்கும். மீண்டும் அவர்கள் தோள்கள் மீது ஏற்றப்பட்டதும் அந்த முட்டுகள் அப்படியே அகற்றப்படும்.
இவ்வாறு முட்டுக் கொடுப்பதற்கென்று சப்பரத்துடனே சிலர் செல்வர். அவர்களுக்கு ஒரே வேலை விட்டுக் கொடுப்பதும் முட்டை எடுப்பதும். அந்த ஆட்கள் தான் முட்டாள்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டார்கள். முட்டுக்கொடுக்கும் ஆள் முட்டாள். ஆகா எவ்வளவு அற்புதமான அவசியமான வேலைக்குப் பயன்படும் இவர்களை அறிவில்லாதவர்கள் பட்டியலில் ஏன் சேர்க்க வேண்டும்?
அதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், சப்பரம் வீதிகளில் செல்லும்போது, மீண்டும் கோவிலுக்கு வரும் வரை, இந்த முட்டாள்கள் வேறு எவற்றிலும் கவனம் செலுத்துவதில்லை. முன்னால் சொல்கிறதா? பின்னால் செல்கிறதா? திருப்பத்தில் திரும்புகிறதா? எப்படித் திரும்புகிறது? அதை எப்படி எல்லாம் திருப்புகிறார்கள்? எப்படி மேலே தூக்குகிறார்கள்? எப்படி மெதுவாகக் கீழே இறங்குகிறார்கள்? பள்ளத்தில் எப்படிச் செல்கிறார்கள்? மேட்டில் எப்படி ஏறுகிறார்கள்? இவை எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். அது அவர்களுக்குத் தேவையில்லாத செயல்கள். சுமந்து செல்வர் தோள்களில் இருந்துஏற்றப்படும்போது, முட்டுக் கொடுக்க வேண்டும். மீண்டும் தோளில் ஏறிய பின் கம்பை எடுத்து விட வேண்டும். இந்த ஒரே தொழிலில் மட்டும் மிகவும் கவனமாக இருப்பார்கள். திருப்புவதற்கு உதவி செய் என்றால் அவனுக்குத் தெரியாது. தோளில் தூக்கு என்றால் அவனுக்குத் தெரியாது.அப்படியானால் முட்டுக் கொடுக்கும் தொழிலை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு வேறு எதையும் தெரியாமல் இருப்பதால் அதை அறியாமை என்று நாம் நினைத்து விட்டோம்.
முட்டாள்கள், சப்பரம் சுமக்கும் தொழிலில் கூட வேறு எதையும் அறியாமல் முழு நேர வேலையாக முட்டுக் கொடுப்பது மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களை அறியாமல் இருப்பதால் இன்றைக்கு அறியாமை உள்ளவர்களை முட்டாள்கள் என்று நாம் அழைக்கிறோம்.
முட்டாள் என்பதற்கு பரு வேலையாள் என்பது பொருள் என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். இப்போது சிந்திக்க. நுணுக்கமான வேலைகளைக் கற்றுக் கொள்ளாமல் பட்டான வேலையை மட்டும் செய்யத் தெரிந்தவன் முட்டாள் என்று அழைக்கத் தொடங்கி, நுணுக்கமான அறிவு இல்லாமல் மேலோட்டமான அறிவு உள்ளவனுக்கு அப்பெயர் நிலைத்துப் போனது…
முண்டம்… என்ற சொல்லுக்கு தலையில்லாத உடல் என்பது பொருள்.
முட்டம்… என்னும் சொல்லுக்குக் கூரை இல்லாத வீடு என்பது பொருள். (முட்டமேல் கூரையில்லா வீடே… ஔவை)
தலைவன் இல்லாத பெண்ணை தலையில்லாத உடலோடு ஒப்பிட்டு……”மு…டை”… என்னும் சொல்லால் குறிப்பிடுவது உண்டு. அச்சொல் அவை மரியாதை குறிப்பு நான் முழுமையாகச் சொல்லாமல் விட்டு இருக்கிறேன். முண்டு என்பது பெண்கள் அணியும் (குறிப்பாக கேரளாவில்) ஒரு வகை உடை. கழுத்துக்கு கீழே மார்பு வரை தான் அந்த உடை இருக்கும். இப்போது யோசியுங்கள் அதுவும் முழுமை பெறாத உடையாக இருக்கிறது. ஆண்கள் அணியும் முண்டா பனியன் கை அற்றதாக இருக்கும் கழுத்து இருக்காது.
முட்டி என்றால் கையை நீட்டி விரல்கள் ஐந்தையும் உள்ளே மடக்கிய நிலை. இவை எல்லாமே தலைப்பகுதி இல்லாத மீதி பகுதியைக் குறித்து நிற்கும் சொற்கள் என்பது உணரத்தக்கது. சொற்களில் காணப்படும் பொதுத் தன்மையைக கூர்ந்து நோக்குக
-க.முத்துமணி
முள்+தாள் = முட்டாள் முள்ளின் அடிப்பாகம் கூர்மையற்று இருக்கும். அதுபோல் அறிவுக்கூர்மையற்று இருப்பவன் முட்டாள்..
Hi! I just wanted to ask if you ever have any issues with hackers?
My last blog (wordpress) was hacked and I ended up losing a few months of hard work due to no
back up. Do you have any solutions to protect against
hackers?