தமிழாசிரியர் “காமராஜ்” காளிராஜன்
1 min readKamaraj KaliRaj
9.10.2021
சினிமாவில் நடிகர்கள் சிலருக்கு அவர்கள் தாங்கும் வேடம் அடைமொழியாக மாறும். அதே போல் குறிப்பிட்ட வேடத்திற்கு சிலர் மிகவும் பொருத்தமாக இருப்பர். அப்படித்தான் கிருஷ்ணர் வேடத்திற்கு என்.டி.ராமராவும், முருகன் வேடத்திற்கு சிவகுமாரும் மிகவும் பொருத்தமாக இருந்தனர்.
அப்படி ஒருவர் பெருந்தலைவர் காமராஜர் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக விளங்குகிறார். ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்ல. பெருந்தலைவர் உயிர்மூச்சாக போற்றிய கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்னும் புனித பணியை மேற்கொண்டுள்ளார். அவரது பெயர் காளிராஜன். சிவகாசி எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளியில் படிக்கும்போதே நாடகத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வம் ஆசிரியர் பணியை மேற்கொண்டாலும் தொடர்ந்தது. அவர் பணியாற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் நாடகம் இடம்பெறும். அப்படி ஒரு முறை ஆசிரியர் முத்துமணி எழுதிய பெருந்தலைவர் காமராஜர் பற்றிய நாடகம் அறங்கேற்றம் நடந்தது. இதில் ஆசிரியர் காளிராஜை காமராஜர் வேடம் தரிக்க வைத்தார், முத்துமணி. வேடம் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்தியது. 2018ம் ஆண்டு நடந்த அந்த நாடகத்தில் காளிராஜிக்கு நல்ல பெயர் தந்தது. இதன் மூலம் அவரது புகழ் உள்ளூர் மட்டுமின்றி வெளியூருக்கும் பரவியது.
மடத்துப்பட்டி, சூலக்கரை, ஆமத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் இவரை “பெருந்தலைவராக’ அழைத்து பெருமை படுத்தினார்கள்.
மதுரை, ராஜபாளையம் மதுரை போன்ற ஊர்களில் தேசியத் தலைவர்களின் விழாக்களில் இவரை காமராஜர் வேடத்துடன் அழைப்பார்கள். விழாக்களின்போது இவரை அழைத்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்தார்கள்.
சுதந்திர தின விழாவின்போது சிவகாசி நகரில் 75 சுதந்திர வீரர்கள் வேடமிட்டு மாணவர்கள் கூடியபோது இவர் காமராஜர் வேடமிட்டு அனைவரையும் கவர்ந்தார்.
கேரளாவில் இருந்து வெளிவரும் மருதாணி என்ற மாத இதழ் நிருபர் சிவகாசிக்கு வந்து இவரைப் பேட்டி கண்டு பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டார்.
இதனை பார்த்து கேரளாவில் கொல்லம் நாடார் சங்கம் இவரை அழைத்து காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடியது. காமராஜர் வேடத்தில் சென்ற இவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு. இவர் நடந்து சென்றபோது கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்றனர். மேலும் பெரிய மனிதர்கள் பலரும் இவரோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். எம்.எல்.ஏ.யும் நடிகருக்கும் முகேஷ் கைகுலுக்கி பாராட்டினார்.
இது தனக்கு கொடுத்த கவுரவம் அல்ல என்றும் பெருந்தலைவருக்கு கொடுத்த மரியாதை என்றும் கூறினார். தினமலர் நாளிதழும் இவரை பேட்டிகண்டு செய்தி பிரசுரித்தது.
பட்டம்
சிவகாசியில் இயங்கி வரும் சிரிப்பு மன்றம் என்ற அமைப்பு இவருடைய இந்த பணியை பாராட்டி இவருக்கு “காமராஜ் காளிராஜன்” என்ற ஒரு பட்டத்தை வழங்கியது. இந்தப்பட்டத்தை வழங்கியது ஆசிரியர் முத்துமணிதான்.
காமராஜர் வேடம் தாங்கும் காளிராஜ் நம்மிடம் பேசும்போது கூறியதாவது:&
எனக்கு குருவாக இருப்பவர் ஆசிரியர் முத்துமணிதான். என்னுள் இருக்கும் காமராஜரை வெளிக்கொண்டுவந்தவர் அவர்தான். இந்தவேடம் மூலம் எனக்கு கிடைத்த பெருமை அவரையே சாரும்.
நான் காமராஜர் வேடம் போடும்போது டோப்பா வைக்க மாட்டேன். ஒவ்வொரு முறை வேடம் போதும் தலையில் முடிவை சவரம் செய்து கொள்வேன். ஒரு முறை கல்வி கொலைக்காட்சியில் நடிக்க காமராஜர் வேடம்போட்டேன். அப்போது எனது தலைமுடியை எடுக்க சவரத் தொழிலாளி பணம் ஏதும் வாங்க மறுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜர் வேடம் போடத் தொடங்கிய பின் உங்களுக்குள் எந்த மாற்றமும் தெரிகிறதா எனக் கேட்டதற்கு, அந்தப் பெரியவரின் வேடம் தாங்கிய பின் எனக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற உந்துதல் வந்துள்ளது என்றார். இவர் சிங்கம்&2 உள்பட சில படங்களிலும், நாதஸ்வரம் உள்பட சில தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவருடைய மனைவி கவுரிதேவி. ஜெய் விஷ்வா என்ற மகனும் ஜெய்ஸ்ரீ மகளும் உள்ளனர்.
காமராஜரை நேரில் பார்ப்பது போல் உள்ளது. வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் சேவை தொடரட்டும்.