மனைவி மீதான சந்தேகத்தின்பேரில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற வாலிபர்
1 min read
13.3.2020
தேனி மாவட்டம் போடி ஜமீன்தோப்பு தெரு மின்வாரிய ரோட்டில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (26). தனியார் மில்லில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அழகுமணி (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். அழகுமணி மீது சில ஆண்டுகளாகவே பன்னீர்செல்வத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2வதாக பெண் குழந்தை பிறந்து 10 மாதமே ஆகிறது. இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கடந்த சில மாதங்களாக பன்னீர்செல்வம், மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.
மேலும் வேறு ஒருவருக்கு பிறந்த இந்த குழந்தையை கொலை செய்யப் போகிறேன் மிரட்டி வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த அழகுமணி, குழந்தையை தூக்கிக் கொண்டு 11ம் தேதி கோடாங்கிபட்டியில் உள்ள தனது தாய் பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்று விட்டார்.
அங்கு சென்ற பன்னீர்செல்வம், மனைவியை மீண்டும் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அழகுமணி மறுக்கவே, 10 மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்று, பழனிசெட்டிபட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றில் வீசி எறிந்து விட்டார். இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து அழகுமணி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்டு, பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், 10 மாத குழந்தையை தந்தையே கிணற்றில் வீசி, கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.