கள்ளக்காதலனை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலி
1 min read
தேனி மாவட்டம், போடியில் உள்ள நந்தவன தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி(40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
அதே ஊரை சேர்ந்த சங்கையாவின் மகன் ராஜா(30). டிரைவர். தனியாக வசித்து வந்த வளர்மதிக்கும், ராஜாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியது. நாளடைவில் வேறு ஒருவருடன் வளர்மதிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் ராஜாவிடமிருந்து, வளர்மதி விலகி சென்றுள்ளார். இதனை ராஜா கண்டித்துள்ளார். இதனால் சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜா, வளர்மதிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்த வளர்மதி, ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி ஆசைவார்த்தைகள் கூறி ராஜாவை தனது வீட்டிற்கு வரவழைத்தார். நேற்றிரவு 10 மணியளவில் வளர்மதியின் வீட்டிற்கு ராஜா சென்றார். அங்கு தயாராக இருந்த வளர்மதி, தன் கையில் இருந்த மிளகாய் பொடியை ராஜாவின் கண்களில் தூவினார். பின்னர் அரிவாளால் ராஜாவின் கழுத்தை அறுத்தார். இதில் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் ராஜா உயிரிழந்தார். பின்னர் போடி நகர் காவல்நிலையத்தில் வளர்மதி சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜாவின் உடலை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், வளர்மதியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனை, கள்ளக்காதலி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.