நெல்லை அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
1 min read
17.3.2020
நெல்லை அருகே சீதபற்பநல்லூர் பக்கம் உள்ள வல்லவன்கோட்டை புளியமரத் தெருவைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவரது மனைவி வள்ளியம்மாள் (33). இவர்களுக்கு மகராசி (8), கனகலட்சுமி (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். திருமலைக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் இறந்து விட்டார்.
வள்ளியம்மாள் கூலிவேலை பார்த்து குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி ஆவுடைதங்கம். இவரது வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் நகை திருட்டு போனது. இதுகுறித்து ஆவுடைதங்கம், வள்ளியம்மாள் மீது சந்தேகம் இருப்பதாக சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நேற்று வள்ளியம்மாளை அழைத்து இதுதொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டுக்கு வந்தவுடன் ஆவுடைதங்கத்திடம் ‘என் மீது எப்படி போலீசில் புகார் செய்யலாம்’ என்று கேட்டார்.
இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த வள்ளியம்மாள் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் மகராசியை எழுப்பி வாயில் விஷத்தை ஊற்றினார். பின்னர் தானும் குடித்தார். நள்ளிரவில் இவர்கள் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம்,பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தாய், மகள் இருவரும் மயங்கி கிடந்தனர். இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே மகராசி இறந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாளும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.