கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்
1 min read
5.4.2020
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, அய்யனாரூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தது தெரிய வந்தது. அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருடன் வீட்டில் இருந்த மகன், இரண்டு மகள்கள், மூத்த மகளின் ஒன்றரை வயது குழந்தை ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என 3ம் தேதி ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் அவர்களை வீட்டில் வைத்து மருத்துவ கண்காணிப்பு செய்வது கடினம் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்வதற்காக 4ம் தேதி மருத்துவ குழுவினர் 2 குழுக்களாக இரு வாகனங்களில் அய்யனாரூத்து சென்றனர். அவர்களை மருத்துவ வாகனங்களில் ஏற்றும்போது அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை மறித்து வாக்குவாதம் செய்தனர்.
அப்போது மருத்துவக் குழுவில் சென்ற வெள்ளாளன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் காளிராஜை சிலர் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி ஜீப்பில் ஏறச் சென்ற காளிராஜை தொடர்ந்து தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. செல்போனையும் பறித்து உடைத்தனர். உடன் சென்ற மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு ஜீப்பில் ஏற்றினர்.
இதுகுறித்து காளிராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் மருத்துவ பணியாளர்களுடன் சென்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.