வீடு திரும்பினார் இங்கிலாந்து பிரதமர்
1 min read
13.4.2020
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லையென்று உருக்கமாக தெரவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(55) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த போதும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
சிகிச்சையின் போது அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் போரிஸ் ஜான்சன் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் இருப்பதால் செயற்கை சுவாச கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் அவர் முழுவதும் குணமடைந்து 12ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது உயிரை காப்பாற்றுவதற்கு போராடிய மருத்துவப் பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை. நாடு முழுவதும் பலர் வீட்டிலேயே இருக்க முயற்சிப்பது மதிப்புக்குரிய ஒன்று. கடந்த காலங்களில் பல சவால்களை வென்றுள்ளோம். அதேப்போல் ஒன்றாக இணைந்து இந்த சவாலை சமாளிப்போம்“ என்றுள்ளார்.