1000 கிரோ மீட்டர் தூரம் உள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண்ணுக்கு வழியில் பிரசவம்
1 min read
Pregnant women had baby who walk to their hometown
10-5-2020
மராட்டிய மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட கர்ப்பிணிக்கு 70 கி.மீ. தூரம் நடந்து சென்ற நிலையில், குழந்தை பிறந்தது. அதன்பின்னரும் அவர் 164 கி.மீ., தூரம் நடந்து சென்றார். அவரை மீட்ட போலீசார் கார் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணி
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் உச்சாரா கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் கவுல். இவரது மனைவி சகுந்தலா.
கணவன்-மனைவி இருவரும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களைப்போல் பலர் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை செய்தனர்.
இந்தநிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இதானல் அவர்கள் வேலை செய்த தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் அவர்கள் வேலை இன்றி சாப்பிட கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.
சகுந்தலா தற்போது 9 மாத கர்ப்பிணியா இருந்தார். அவரும் தனது கணவருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
குழந்தை பிறந்தது
நாசிக்கில் இருந்து அவர்களது ஊர் 1,000 கி.மீ., தூரத்தில் உள்ளது. ஆனாலும் அவர்கள் நடந்தே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு நடக்கத் தொடங்கினர்
அவர்கள் சுமார் 70 கி.மீ., தூரம் நடந்த நிலையில் பிம்பால்கோவான் என்ற இடத்தை அடைந்தனர். அப்போது சகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் அவருடன் நடந்து வந்த பெண்கள் அவருக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்தனர். சாலையோரம் சேலைகளால் மறைவு ஏற்படுத்தினார்கள். அங்கே சகுந்தலா குழந்தையை பெற்றெடுத்தார்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், குழந்தையுடன், மீண்டும் சகுந்தலாவும் சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினார் அதன்பின் 164 கி.மீ., தூரம் நடந்து சென்று, மராட்டியம்- மத்திய பிரதேச மாநில எல்லையில் உள்ள பிஜாசன் நகரை அடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்த போது கைக்குழந்தையுடன் சகுந்தலா நடந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களுக்கு போலீசார், உணவு, தண்ணீர் வழங்கினர். அதன்பின் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்