சிறுமியை தீவைத்த எரித்த அதிமுக பிரமுகர்கள்
1 min read
11.5.2020
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் – ராஜி தம்பதிக்கு ஜெயராஜ்(16), ஜெயஸ்ரீ (15), ராஜேஷ்வரி(12), ஜெபராஜ்(10) என்ற 4 குழந்தைகள் இருக்கிறார்கள். ஜெயபால் தனது கிராமத்தில் 2 பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். ஜெயராஜ், ராஜேஷ்வரி, இவர்களின் பாட்டி ஏழம்மாள் ஆகிய 3 பேரும் தினமும் இரவில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடையில் தங்கி கொள்வது வழக்கம். அதேபோல் தொட்டி குடிசை மெயின் ரோட்டில் உள்ள கடையின் அருகில் உள்ள வீட்டில் ஜெயபால், ராஜி, ஜெயஸ்ரீ, ஜெபராஜ் தங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஜெயபால் குடும்பத்துக்கும், அதே ஊரில் உள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகையன், கலியமூர்த்தி குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மே9ம் தேதி இரவு குமரகுப்பன் மகன் பிரவீன்(20) மற்றும் அவருடன் சிலரும் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஜெயபால் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடை பூட்டி இருந்தது. இதையடுத்து கடையின் கதவை தட்டி பீடி கேட்டுள்ளனர். கடையின் உள்ளே இருந்த ஜெயராஜ் வெளியே வந்து நள்ளிரவில் கடையை திறந்து பீடி எடுக்க முடியாது என்றும், காலையில் தான் தருவேன் என்றும் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரவீன், ஜெயராஜை ஆபாசமாக திட்டி, காதில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ஜெயராஜ் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 10ம் தேதி காலை ஜெயபாலும் அவரது மகன் ஜெயராஜ் ஆகியோர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவல் நிலையத்துக்குள் நுழையும் போது ஜெயபாலின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது மகள் ஜெயஸ்ரீ எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே இருவரும் புகார் கொடுக்காமல் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்க்கும் போது சிறுமி உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அதைக்கண்ட அவரது தந்தை திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தில், அதே ஊரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகையன் மற்றும் அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் சேர்ந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து அதிமுக பிரமுகர்கள் முருகையன், கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தாெடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.