தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறப்பு
1 min read
Reopening of liquor stores in Tamil Nadu
15-5-2020
தமிழகத்தில் சனிக்கிழமை முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
மதுக்கடைகள்
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டது. இதனை அடுத்து மதுக்கடைகள், கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன. 2 நாட்கள் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.
மீண்டும்…
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு கடைகளை மூடும்படி ஐகோர்ட்ூ பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் திறக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உ்ளளது.
‘
• சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதில் எந்த சமரசமும் வேண்டாம்.
• கொரோனா தொற்று அதிகமுற்ற பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது.
• மது வினியோக கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும்.
• சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை.
ஆதார் தேவை இல்லை
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுக்கடைகளுக்கு வருவோர் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை சுப்ரீம்கோர்ட்டு தளர்த்தி உத்தரவிட்டுள்ளது