மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டி கொலை
1 min read
8.6.2020
Patient hacked to death at Madurai Government Hospitalமதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகன் சிகிச்சையில் இருந்த 101 வார்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கு படுக்கையில் படுத்திருந்த முருகனை, அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியது. அவரது அலறல் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தலை, கழுத்து மற்றும் மார்பில் கத்திக்குத்து விழுந்ததில், முருகன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட கொலையாளிகள், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கொலை குறித்து, மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக் மற்றும் மதிச்சயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கரும்பாலை பகுதியை சேர்ந்த பட்டா ராஜசேகர் என்பவரை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த சந்துரு, முருகன் உட்பட 8 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இதில் கைதான 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளனர்.
இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, தற்போது முருகன், கூலிப்படையினர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிளை 2 தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, சிகிச்சையில் இருந்தவரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.