திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் -ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
1 min read
8.6.2020
The darshan of the devotees began in Tirupatiகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கோயிலில் அர்ச்சகர்கள் மூலம் நித்ய பூஜைகள் நடந்து வந்தது. இதையடுத்து ஒரு சில நிபந்தனைகளுடன் இன்று முதல் (8ம் தேதி) வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர்குழு தலைவர் சுப்பாரெட்டி, உறுப்பினர் சேகர் ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆகியோர் தலைமையில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறை, அன்னப்பிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. கை கழுவ குழாய்கள் மீது கைகளை வைக்காமல் கால்களில் பட்டனை அழுத்தினால் தண்ணீர் வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் 8ம் தேதி அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சுப்ரபாத சேவையுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை– அணிந்தபடி சுவாமியை தரிசனம் செய்தனர். தீர்த்தம், சடாரி, சிறிய லட்டுகள் வழங்கப்படவில்லை.
உண்டியல் காணிக்கை செலுத்தும் இடத்தில் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே காணிக்கை செலுத்த அனுமதிதக்கப்பட்டனர். திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அலிபிரியில் உடல் வெப்ப நிலை கண்டறிந்து, கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்–னரே மலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுக்கின்றனர். புதன்கிழமை திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 11ம்தேதி முதல் மற்றப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
வெளிமாநில பக்தர்கள் ஆந்திர அரசின் மூலம் மாநில எல்லையில் நுழைவதற்காக வழங்கப்படும் இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும். இதற்காக 8ம் தேதி காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் 3ஆயிரம் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதேபோல் ரூ. 300க்கான தரிசன டிக்கெட்டில் 3ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான முன்பதிவும் தொடங்கியது.
சீனிவாசமங்காபுரம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளிட்ட தேவஸ்தான கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களும் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 நாட்களுக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கோயில் முழுவதும் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.