தின்பண்டம் என நினைத்து நாட்டு வெடியை கடித்த சிறுவன் தலை சிதறி சாவு
1 min read
11.6.2020
A boy who was bitten by a bullet diedதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காதரன் (31), தமிழரசன் (28), மோகன்ராஜ் (16). உறவினர்களான இவர்கள், நேற்றுமுன்தினம் பாப்பாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் செல்வகுமார்(44) என்பவரிடம் 3 நாட்டு வெடிகளை விலைக்கு வாங்கி வந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசி மீன்பிடித்துள்ளனர்.
இதில் பிடித்த மீன்களை அலகரையில் உள்ள சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மீதமிருந்த ஒரு நாட்டு வெடியை அங்கிருந்த கட்டிலில் வைத்துவிட்டு பின்புறத்தில் மீன்களை சமைப்பதற்கு சுத்தம் செய்துள்ளனர். அப்போது அங்குவந்த பூபதியின் மகன் விஷ்ணுதேவ்(6) கட்டிலில் இருந்த நாட்டுவெடியை திண்பண்டம் என நினைத்து கடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது நாட்டுவெடி பலத்த சத்தத்துடன் வெடித்ததில் விஷ்ணுதேவ் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் விஷ்ணுதேவ் உடலை போலீசுக்கு தெரியாமல் அப்பகுதி சுடுகாட்டில் எரித்துள்ளனர்.
இது தொடர்பாக அலகரை விஏஓ ரெஜினாமேரி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கங்காதரன், மோகன்ராஜ், கிரஷர் உரிமையாளர் செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தமிழரசன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடியை விற்ற செல்வகுமார் அதை தயாரிக்க முறையாக அனுமதி பெற்றாரா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.