பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் அதிகாரி விபத்தில் பலி
1 min read
Police SI killed in motorbike accident
11-6-2020
பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் அதிகாரி விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் அதிகாரி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பிரதீஷ்(வயது 30). சென்னையில் சென்னை தலைமைச் செயலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை சாலமன்வேதமணி. இவர் சுரண்டையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.
பிரதீஷ் திப்பணம்பட்டி மீனாட்சி நகரில் உள்ள தாத்தாவீட்டில் (அம்மாவின் தந்தை) இருந்துதான் படித்து வந்தார். சென்னையில் வேலை பார்த்துவரும் பிரதீசுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை மோட்டார் சைக்கிளிலேயே சென்னைக்குப் புறப்பட்டார்.
லாரி மோதியது
காலை 10.30 மணி அளவில் அவர் திருவில்லிபுத்தூரை தாண்டி சொக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கிராவல் ஏற்றி வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பிரதீஷ் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த பிரதீசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குரூப்-1 தேர்வுக்கும் பயிற்சி எடுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.