நெல்லையில் திடீர் தீவிபத்து – 8 கடைகள் எரிந்து சாம்பல்
1 min read
11.6.2020
Sudden fire in Tirunelveli – 8 shops burnedநெல்லை-தென்காசி மெயின் ரோடு சென்ட்ரல் தியேட்டர் எதிர் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் ஒர்க்ஷாப், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடை ஒன்றில் இருந்து இன்று அதிகாலை 1 மணிக்கு புகைமூட்டம் வெளிப்பட்டது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகே உள்ள கடைகளுக்கும் தீ அடுத்தடுத்து பரவியது. அங்கிருந்த பொருட்கள் கொளுந்துவிட்டு எரிய தொடங்கின. இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ்ஆனந்த், பேட்டை நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், பாளை நிலைய அலுவலர் வீரராஜ், சேரன்மகாதேவி நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுப்பிரமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 5 வாகனங்களில் வந்து நீரை பீய்ச்சியடித்து அதிகாலை 5.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என தெரிகிறது. இவ்விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த தீவிபத்து சம்பவத்தால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.