தம்பதிகளாக வாழ்ந்த வாலிபர்கள் குழந்தை கடத்தல் வழக்கில் கைது
1 min read
15.6.2020
Young couple arrested for child traffickingதிருப்பூர், போயம்பாளையம் பகுதியில் வசிப்பவர் லிங்கராஜ். இவரது மனைவி நிஷாந்தி. இவர்களுக்கு 6 வயது ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நிஷாந்தி 9ம் தேதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தந்தை செல்வராஜ் மற்றும் அவருடன் சித்தி ராதா, தம்பி ராஜ்குமார், அவரது நண்பர் கார்த்திகேயன் என்கிற அசோக் ஆகியோர் காரில் திருப்பூருக்கு வந்து எனது பெண் குழந்தையை மதுரைக்கு கடத்திச் சென்றனர். நான், எனது தந்தையிடம் குழந்தையை கொடுக்குமாறு கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் நிஷாந்தியின் தந்தை செல்வராஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தை நிஷாந்தியின் தம்பி ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் கார்த்திகேயனிடம் இருப்பதாகவும், அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் செல்வராஜ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமார், கார்த்திகேயனை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், ஆத்துக்குளம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் நேற்று இரவு ராஜ்குமார் மற்றும் கார்த்திகேயனை கைது செய்து அவர்களிடம் இருந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தம்பதிபோல் வாழ்க்கை: பிடிபட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற அசோக் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கு 2 முறை திருமணம் ஆகியுள்ளது. இவரது நடத்தை சரியில்லாததால் 2 மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டதும், இதனால் கார்த்திகேயன், தனது நண்பரான ராஜ்குமாருடன் கணவன்- மனைவி போல் நெருக்கமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை தன்னுடைய குழந்தை என்று கார்த்திகேயன் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். மேலும் இந்த குழந்தையை வைத்து சில சொத்துகளை அபகரிக்க முயன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.