தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா; இன்ஸ்பெக்டர் உள்பட 48 பேர் சாவு
1 min read
died 48 including police inspecter for corona in tamil nadu
17-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒருவர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிடப்பட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) மட்டும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 80 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமூ உள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 25,463 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,37,787 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
48 பேர் சாவு
இன்று கொரோனாவால் மொத்தம் 48 பேர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் 40 பேரும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா 2 பேரும், திருவள்ளூர், திண்டுக்கல், விழுப்புரம், மதுரையில் தலா ஒருவர் அடங்குவர்.
இன்று இறந்தவர்களில் 38 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 10 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் ஆவர்.
இன்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,624 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 21,990 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,533 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 41,742 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 5,918 பேரும் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவு
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாலமுரளிக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பரிசோதித்தபோதுகொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 13-ம் தேதி அவரது உடல் நிலை மோசமானது. அது தொடர்பாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் இன்று மதியம் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி மாலை 4 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பாலமுரளிக்கு மனைவி மற்றும் 13 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2000 ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்தார். சென்னை நீலாங்கரை, கே.கே. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். சட்டம், -ஒழுங்கு காவல் பணியில் திறமையானவர் என பெயர் பெற்ற பாலமுரளி, மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெற்றவர். அவர் நேர்மையான அதிகாரி என்றும் எப்போதும் மனிநேயத்துடன் செயலாற்றுபவர் என்றும் அவருடன் பணியாற்றிய காவலர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 731 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 278 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி இரங்கல்
பாலமுரளி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
சென்னை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 35,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 162 பேருக்கும், திருவள்ளூரில் 90 பேருக்கும், கடலூரில் 77 பேருக்கும், ராணிப்பேட்டையில் 70 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை, தென்காசி
நெல்லையில் 15 பேருக்கும்(இதில் வெளியூரியில் இருந்து வந்தவர்கள் 4), தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 50 (இதில் வெளியூரில் இருந்து வந்தனர்கள் 7) பேருக்கும் இன்று
கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை
கோவை மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த, நான்கு பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அரக்கோணத்தில் இருந்து ரெயில் மூலம் கோவை சென்ற, பீளமேட்டை சேர்ந்த 46 வயது ஆண் மற்றும் 13 வயது சிறுவனுக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.