உயர்கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா- ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
Minister K.P.Anbalagan affected for corona
19-6-2020
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை நியமித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
கொரோனா
இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் தான் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் விவரம்
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) வரை 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 501 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 60.09 சதவீதம் ஆண்கள், 39.90 சதவீதத்தினர் பெண்கள், 0.01 சதவீதத்தினர் மூன்றாம் பாலினத்தனவர் ஆவர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,743 பேரும், தேனாம்பேட்டையில் 4,504 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலம் வாரியாக…
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரம் மண்டல வாரியாக வருமாறு:-
ராயபுரம் – 5,828
தண்டையார்பேட்டை – 4,743
தேனாம்பேட்டை – 4,504
கோடம்பாக்கம் – 3,959
அண்ணா நகர் – 3,820
திரு.வி.க.நகர் – 3,244
அடையாறு – 2,144
வளசரவாக்கம் – 1,571
திருவொற்றியூர் – 1,370
அம்பத்தூர் – 1,305
மாதவரம் – 999
ஆலந்தூர் – 781
பெருங்குடி – 729
சோழிங்கநல்லூர் – 707
மணலி – 525
====