July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

“எங்கிருந்தாலும் வாழ்க” பாடலை ஏ.எல்.ராகவன் மரணம்

1 min read
playback singer AL Raghavan expired

19-6-2020

எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடலை பாடிய புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மரணம் அடைந்தார்.

ஏ.எல்.ராகவன் மரணம்

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன். இவரது மனைவி பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரத்தக்கண்ணீர் படத்தில் காந்தா வேடத்தில் நடித்து பிரபலம் ஆனவர்.
ஏ.எல்.ராகவனுக்கு திடீரென்று மரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.

வாழ்க்கை குறிப்பு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் 1933-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் லட்சுமணன். ஊர் பெயரையும் தந்தை பெயரையும் இன்சியலாக கொண்டு ஏ.எல். ராகவன் என்று அழைக்கப்பட்டார். இவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவர் தனது 10 வயதில் பால கான விநோத சாபாவில் சேர்ந்து பாடினார். 1947-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் பால கிருஷ்ணனாக இவர் முதன்முதலில் நடித்தார்.

1950-ம் ஆண்டு வெளிவந்த “விஜயகுமாரி” என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். குமாரி கமலாவுக்காக பெண் குரலில் இப்பாடலைப் பாடினார்.
பெண் குரலில் பாடி வந்த ஏ.எல்.ராகவன் புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து ஹலோ மை டியர் ராமி என்ற பாடலை முதன் முதலாக ஆண் குரலில் பின்னணி பாடினார்.
பின்னர் பல படங்களுக்கு பின்னணி பாடினார்.

இவருக்கும் பிரபல தமிழ் நடிகை எம்.என்.ராஜத்துக்கும் 1960-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
ஏ.எல்.ராகவன்

1950-ம் ஆண்டில் இருந்து 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கியவர்கள்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்ற மிகப் பிரபலமான பாடலைப் பாடியவர்.

இவர் 1948-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் 1951-இல் வெளிவந்த “சுதர்ஸன்” என்ற படத்தில் பகவான் கண்ணனாக நடித்திருக்கிறார். கல்லும் கனியாகும் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் இரு படங்களைத் தயாரித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார். இப்படம் சுமாராகவே ஓடியது. அத்துடன் சவுந்தரராஜன் படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இவர் 1980-இல் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், ரி.ஆர்.பாப்பா, இளையராசா உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார். பாடல்கள் பிரபலமானாலும், கதையில் வலுவில்லாததால் படம் தோல்வியைத் தழுவி இவரைப் பல லட்சங்களை இழக்கச்செய்தது.

நாகேசுக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். எனவே அவரது படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர். வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அவரை பிரபலப்படுத்தின.

எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர்.

மேடை பாடகர்

சினிமாவில் பாடும் வாய்ப்பு குறைந்தவுடன் அவர் மேடைகளில் அதிகமாக பாடினார். இவர்தான்.எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர்.

ஏ.எல்.ராகவன்-எம்.என்.ராஜம் தம்பதியருக்கு 1963-ம் ஆண்டு பிரம்ம லட்சுமணன் என்ற மகனும், 1969ம் ஆண்டு நளினா மீனாட்சி என்ற மகளும் பிறந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.