சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி கொரோனா வார்டாகிறது; காலி செய்ய மாணவர்களுக்கு உத்தரவு
1 min read
orona Ward becomes Chennai Anna University hostel; Students are ordered to evacuate
20-6-2020
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக அங்கு தங்கி இருக்கும் மாணவர்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா
சென்னையில் நாளுக்குநாள் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆஸ்பத்திரியில் போதிய இடம் இல்லை. எனவே நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சிலவற்றை தனிமைப்படுத்துபவர்களுக்கான மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது ஆராய்ச்சி மாணவர்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு 20-ந்தேதிக்குள் (நேற்று) அதனை ஒப்படைக்கவேண்டும் என்று மாநகராட்சி ஏற்கனவே கூறியிருந்தது.
அந்த விடுதிகளில் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வு தொடர்பான பொருட்கள், கட்டுரைகள் மற்றும் மாணவர்களின் தனிப்பட் பொருட்கள் இருப்பதால் அதனை அகற்றி ஒப்படைப்பது உடனே முடியாத காரியம் என்றும் , சில மாணவர்கள் விடுதியில் இருப்பதாலும் குறுகிய காலத்தில் ஒப்படைக்க முடியாது என்றும் சென்னை மாநகராட்சியிடம் அண்ணா பல்கலைக்கழகம்,தெரிவித்தது.
காலி செய்ய உத்தரவு
ஆனால் சென்னை மாநகராட்சியோ எப்படியாவது ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தர முடிவுசெய்திருப்பதாக கூறப்பட்டது.
இப்போது விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு
பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று முடிந்து விடுதிகளை திருப்பி அளிக்கும்போது மாணவர்கள் உடனடியாக உபயோகப்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.