திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த தாய்-5 மகன்கள் கொரோனாவுக்கு பலி
1 min read
88 year old leady and her 5 son killed for corona
திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த தாய்-5 மகன்கள் கொரோனாவுக்கு பலி
22-7-2020
திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த தாய் மற்றும் அவரது 5 மகன்கள் கொரோனாவுக்கு பலியானார்கள்.
ஜார்க்ண்ட் மாநிலத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மூதாட்டி
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் என்ற ஊரைச் சேர்ந்தவர் 88 வயது மூதாட்டி. இவருக்கு மொத்தம் 6 மகன்கள். மகன்கள் 6 பேருக்கும் 60 வயது முதல் 70 வயது வரைக்குள் இருக்கும். மகன்களில் 5 பேர் ஜார்க்கண்டிலும், ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த
உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு மூதாட்டியும் அவரது 5 மகன்களும் சென்று இருந்தனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் மூதாட்டி சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்.
இறந்தார்
அவர் ஊருக்கு வந்த சில நாட்களில் அருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் போக்ரோவ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே அதாவது கடந்த 4-ந் தேதி அவர் இறந்துவிட்டார். இறுதி சடங்களில் அவரது 6 மகன்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். மகன்கள் தாயின் உடலை தொட்டு மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.
மூதாட்டியின் உடலை அடக்கம் செய்த பின்னர்தான் அவருக்கு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மகன்கள் சாவு
இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மூதாட்டியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அதேஊரில் வசித்த மகன்கள் 5 பேர் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் மூதாட்டியின் மகன்கள் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக சிகிச்சை பலனின்றி இறந்தனர். 5-வது மகன் கடந்த 20-ந் தேதி (திங்கட்கிழமை) உயிரிழந்தார்.
தாய் இறந்த பின் 16 நாட்கள் இடைவெளியில் 6 பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்தினர் 2 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த மூதாட்டியின் டெல்லியில் இருக்கும் மகனும் தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்றார். அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 6 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குடும்பத்தோடு தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மூதாட்டி வசித்த கட்ரஸ் பகுதி முழுவதையும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.