தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.6,650 கோடி -எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
Rs 6,650 crore for corona prevention work in Tamil Nadu – Edappadi Palanisamy
15-8-2020
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சுதந்திர தினவிழாவில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கொடி ஏற்றினார்
நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) சென்னை கோட்டையில் கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தின் முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். விழாவில் அவர் பேசியதாவது:-
திட்டங்கள்
நான் 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன். மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான், மக்களிடம் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கொரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம். நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
கொரோனாவுக்கு சித்தமருத்துவ சிகிச்சை முறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றை எதிர்கொள்ள 1,29,000 படுக்கைகள் தயாராக உள்ளன. கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும்.
ரூ.6,650 கோடி
தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெல்லும் என்பதை உறுதிபட கூறுகிறேன். தமிழக அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு ரூ6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடுவாழ் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு
சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்
வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்
சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.