கொரோனாவை விரைவில் கண்டறியும் உமிழ்நீர் சோதனை
1 min read
Saliva Direct to detect corona
17-8-2020
கொரோனா வைரசை விரைவில் கண்டறியும் கருவி அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது உமிழ்நீரை வைத்து கண்டு பிடித்துவிடும்.
அமெரிக்கா
உலகிலேயே கொரோனா வைரஸ் பரிசோதனைகள் அமெரிக்காவில்தான் அதிகம் நடக்கிறது. அங்குதான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
எனவே அங்கு பரிசோதனைகளை அதிகரிக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. அதேநேரம் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சலிவா டைரக்ட்
இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற பரிசோதனை கருவியை உருவாக்கி உள்ளனர்.
இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் உருவாக்கப்பட்டு உள்ளது..
இதனை அறிமுகம் செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.
விரைவாக..
இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு இதேபால் உமிழ்நீர் மூலம் சோதனை செய்யும் முயற்சி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.
இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.
இந்த புதிய முறை சோதனை எளிமையானது, செலவு குறைவானது, விரைவானது. வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள் துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.