சொப்னாவுடன் 3 முறை வெளிநாடு டூர் -சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை
1 min read
18.8.2020
3 times overseas tour with Sopna – Re-trial with Sivashankarதிருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடந்தது. இருப்பினும் இந்த வழக்கின் பரபரப்பு கடந்த 2 மாதமாக நீடித்து வருகிறது. இதற்கிடையே தற்போது சொப்னாவுடன், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு இருந்த நெருக்கம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
சொப்னா, சந்தீப்நாயர், சரித்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று வரை மத்திய அமலாக்கத்துறை காவலில் வைத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தது. 10 நாள் தொடர்ந்து நடந்த விசாரணையில் அமலாக்கத்துறைக்கு சொப்னா கும்பல் தங்கம் கடத்தலில் மட்டுமல்லாது, சட்டத்துக்கு புறம்பான வேறுபல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விபரங்களும் கிடைத்துள்ளனவாம்.
இதேபோல சொப்னாவும், சிவசங்கரும் சேர்ந்து 3 முறை துபாய், ஓமன் உள்பட வெளிநாடுகளுக்கு ஒன்றாக சென்று வந்து உள்ளனர். இதை விசாரணை அமைப்புகளிடம் 2 பேரும் ஒத்து கொண்டு இருக்கிறார்களாம். ஆகவே 2 பேரும் எதற்காக வெளிநாடு சென்றார்கள்? அங்கு யார்? யாரையெல்லாம் சந்தித்தார்கள்? அப்போது நடந்த சதித்திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்தும் விசாரிக்க என்ஐஏ தீர்மானித்து உள்ளது.
இதையடுத்து கூடுதல் தகவல்களை பெற சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும், என்ஐஏயும் தீர்மானித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூதரக பார்சலில் தங்கம் கடத்துவற்கான சதித்திட்டம் துபாயில் வைத்து 2019 ஆகஸ்டில் தீட்டப்பட்டு உள்ளது. அதற்கு முன்பே 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கேட்டு கொண்டதன் பேரில் அவரது ஆடிட்டர் வேணுகோபால் சொப்னாவுக்கு வங்கியில் லாக்கரை திறக்க உதவியுள்ளார்.
இந்த லாக்கர் ஆடிட்டர், சொப்னா ஆகியோரது பெயர்களில் எடுக்கப்பட்டு உள்ளது. தங்க கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டப்படுவதற்கு முன்பே லாக்கர் எடுக்கப்பட்டுள்ளதால், தங்கம் கடத்தல் மட்டுமல்லாது வேறு ஏதாவது சட்டத்துக்கு புறம்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தை, சொப்னாவும், சிவசங்கரும் பங்கு போட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணை அமைப்புகளுக்கு எழுந்துள்ளன.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சொப்னாவும், சரித்குமாரும் அமீரக தூதரக அதிகாரிகளுடன் பலமுறை துபாய் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் துபாய் சென்ற பிறகு தூதரக அதிகாரி ஒருவர் இருவருக்கும் ஒரு பார்சலை துபாயில் வைத்து கொடுத்துள்ளார். இதில் பெருமளவு வெளிநாட்டு கரன்சிகள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
விமானங்களில் தூதரக அதிகாரிகள் செல்லும்போது அவர்களது உடமைகள் பரிசோதிக்கப்பட மாட்டாது. இதனால்தான் தூதரக அதிகாரிகள் கரன்சிகள் அடங்கிய பேக்குகளை அவர்களுடன் ெகாண்டு சென்றிருக்கலாம். துபாய் சென்ற பின்னர் தூதரக அதிகாரிகள் அங்கு தங்காமல் உடனடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பயணம் விசாரணை அமைப்புகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. நேற்று எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொப்னா கூறினார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.