தென்காசியில் ரூ.16 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 4 பேர் கைது
1 min read
20.8.2020
Four arrested with Rs 16 lakh counterfeit notes in Tenkasiதென்காசியில் ரூ.16 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த ஒருவர் சிக்கினார். இதையடுத்து தென்காசி பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாட்டம் உள்ளதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தென்காசி ரயில்வே மேம்பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக 3 இருசக்கர வாகனங்களில் நின்று பேசிக் கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நால்வரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே, சந்தேகத்தின் பேரில் வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது வாகனங்களில் இருந்த பைகளில் ரூ.15 லட்சத்து 91 ஆயிரத்து 400 ரூபாய் கள்ள நோட்டுகளை வாகனங்களுடன் பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அவர்கள் தென்காசி ஜமாலியா நகரைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் முகம்மது பாதுசா (40) புளியங்குடி டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த காமராஜ் மகன் வீரகேசவ சொக்கலிங்கம் (30), நெல்லை சங்கர்நகர் கணேசன் மகன் மாரி செல்வராஜ் (35), கீழப்பாவூர் சாமிநாதன் மகன் சுடலை ஈசன் (50) என்பதும் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடுவதற்கு முயன்றதும் தெரிந்தது.
இதுகுறித்து தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசியில் ரூ.16 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.