இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது
1 min read
Infant mortality rate in India is declining
10-9-2020
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக ‘யுனிசெப்’ அமைப்பு கூறியுள்ளது.
குழந்தைகள் இறப்பு
உலகில் குழந்தைகள் இறப்பு நிலை குறித்து ‘யுனிசெப்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் இறப்பை குறைக்க உலக நாடுகள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, பிரசவ சிக்கல்கள், பச்சிளம் குழந்தைகளை தாக்கும் நிமோனியா, மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை தடுக்க தடுப்பூசிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் 30 ஆண்டுகளாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் உலக அளவில் குழந்தைகளின்இறப்பு குறைந்துள்ளது. 1990ம் ஆண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1.25 கோடியாக இருந்தது. ஆனால் அதுவே 2019-ம் ஆண்டு குழந்தைகள் இறப்பு 52 லட்சமாக குறைந்துள்ளது.
இவர்களில் 49 சதவீதம் பேர் நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், காங்கோ மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். நைஜீரியாவும் இந்தியாவும் இணைந்து மூன்றில் ஒரு பங்கு இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
இந்தியாவில்…
இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 34 லட்சமாக இருந்தது. இது 2019-ம் ஆண்டு 8.24 லட்சமாக குறைந்துள்ளது.
அதேபோல 1990-ம் ஆண்டு இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 குழந்தைகள் இறந்தனர். அது கடந்த ஆண்டு 28 ஆக குறைந்துள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டு 5 முதல் 14 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 4.47 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 1.36 லட்சமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.