கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்க நடவடிக்கை; மோடி பேட்டி
1 min read
Corona vaccine action soon available; Modi interview
14-9-2020
கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பாராளுமன்ற கூட்டம்
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்குக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்தது. இதில் கலந்து கொள்ள வரும் எம்.பி.க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவி இருக்கும் இநத நேரத்தில் கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை ராஜ்யசபா, லோக்சபா ஆகியவை ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். இது சனி, ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். இதனை அனைத்து எம்.பி.க்களும் ஏற்றுக்கொண்டனர்.
கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.