பாளையில் 4 பேரை கத்தியால் குத்திய கொள்ளையர்கள்
1 min read
Robbers stab 4 people in Palayankottai
10/20/2020
பாளையங்கோட்டையில் 4 பேரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் நெல்லை டவுன் தையல்காரர் தெருவைச் சேர்ந்த சுப்பையா (63) மற்றும் ரவிச்சந்திரன் (46) ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தனர். அங்கு நேற்று ( சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்கள்.
கத்திக்குத்து
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய பின்னர் மர்மநபர்கள் பணம் கொடுக்காமல், கத்தியை காட்டி மிரட்டி, பெட்ரோல் பங்க்கில் உள்ள அனைத்து பணத்தையும் தருமாறு ஊழியர்களை மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்து கூச்சலிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கத்தியால் சுப்பையா, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
மீன்கடை தொழிலாளர்கள்
அவர்கள், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகில் சென்றபோது, எதிரே வந்த லாரியை வழிமறித்து டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதில் பயந்துபோன டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, கீழே குதித்து தப்பி ஓடினார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீன் கடையில் தொழிலாளர்கள் மீன்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் லாரி டிரைவர், கொள்ளையர்கள் தன்னை விரட்டி வருவது பற்றி கூறினார்.
கைது
உடனே அந்த மீன் கடை ஊழியர்கள் மெயின் ரோட்டுக்கு வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது கொள்ளையர்கள் திடீரென்று மீன் கடை உரிமையாளரின் மகன் ஆனந்த் (27), தொழிலாளியான மணி ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். ஆனாலும் சக தொழிலாளர்கள் அவர்களை விரட்டிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். அப்போது கொள்ளையர்களில் ஒருவரை தொழிலாளர்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் நெல்லை பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த சுப்பையா, ரவிச்சந்திரன், ஆனந்த், மணி ஆகிய 4 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.