உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் 8 கல்லூரி மாணவர்கள் கைது
1 min read
8 college students arrested in rape case
14-/10/-2020
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிறுமி கற்பழிப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.
இதற்கிடையே உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் மேலும் ஒரு சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை கற்பழிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அந்த சிறுமி, ஜான்சி பகுதியில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 8 மாணவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக அங்குள்ள விடுதிக்கு இழுத்துச்சென்று கற்பழித்தனர். பின்னர் சிறுமிக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்த மாணவர்கள், அவரை மிரட்டி அனுப்பியுள்ளனர்.
போக்சோ சட்டத்தில்..
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 8 மாணவர்களையும் கைது செய்தனர். கொரோனா பரவலால் பாலிடெக்னிக் கல்லூரி மூடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி விடுதிக்கு மாணவர்கள் எப்படி வந்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.