டாபர், பதஞ்சலி உள்பட 10 நிறுவனங்களின் தேனில் கலப்படம் கண்டுபிடிப்பு
1 min read
Detection of adulteration in honey of 10 companies including Dabur, Patanjali
3/12/2020
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனையில் டாபர், பதஞ்சலி உள்பட 10 நிறுவனங்களின் தேனில் சர்க்கரைப் பாகு கலப்படம் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தேனில் கலப்படம்
தேன் என்பது மருத்துவக் குணம் நிறைந்த பொருள். நாட்டு வைத்தியத்தில் பெரும்பாலும் தேனை சேர்ப்பார்கள். இது பக்க விளைவுகளை தடுக்கும். மருந்துகளில் உள்ள நச்சுத் தன்மையான மூலக்கூறுகளை அகற்றும். இதனால் மருந்துக்கு பயன்படுத்தும் தேன் கலப்படம் இல்லாமல் இருப்பது நல்லது.
ஆனால் பலர் தேனில் சர்க்கரைப் பாகுவை கலந்து விற்பனை செய்கிறார்கள்.
தேனில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சோதனை நடத்தும். இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்எம்ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது.
10 நிறுவனங்கள்
அந்த வகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் என்எம்ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் பதஞ்சலி, டாபர், சண்டு, அபிஸ் ஹிமாலயா, ஹை ஹனி உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை பாகுகள் கலந்திருப்பதாக சிஎஸ்இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா தெரிவித்தார்.
சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேன் கலப்படமற்ற தேன் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில நிறுவனங்களின் தேனில் கலப்படம் இருக்காது என்று பொதுமக்கள் நம்புவார்கள். ஆனால் அப்படி நம்பிக்கை பெற்ற நிறுவனங்களிலேயே கலப்படம் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.