மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை
1 min read
7 years imprisonment for headmaster who molested students
20/12/2020
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தலைமை ஆசிரியர்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மகிழடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 52). இவர் ராதாபுரம் அருகே சிங்காரத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 16-3-2017 அன்று பள்ளிக்கு சென்ற மாணவிகளை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்தார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை கைது செய்தனர்.
7 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி நேற்று ( சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கினார். இதில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் நம்பிராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெபஜீவா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலா மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்.