பாபநாசம் அணை திறந்ததால் தாமிரபரணியில் வெள்ளம்
1 min read
Flood in Tamiraparani as water from Papanasam dam opened
20/12/2020
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
பாபநாசம் அணை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
இதனால் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. இதே போன்று சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாபநாசம் அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. அணைக்கு வினாடிக்கு 2,785 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
கடனா நதி
இதே போன்று முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணைக்கு வினாடிக்கு 441 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 512 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
மற்றொரு பெரிய அணையான 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் நேற்று 108 அடியை எட்டியது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,165 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம்
இதனால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் கலக்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் ஓடுகிறது.
அருவிகளில் வெள்ளப் பெருக்கு
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை.
ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.