உத்தரபிரதேசத்தில் கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் வரைபடம் வெளியீடு
1 min read
Publication of a map of the Babri Masjid to be built in Uttar Pradesh
20/12/2020
உத்தரபிரதேசத்தில் புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த பல்வேறு கருத்துவேறுபாடுகள் நீண்ட காலமாக இருந்து வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக வழக்குகள் நடந்தது. இது தொடர்பான அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அதில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது.
அதேநேரம் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
வரைபடம்
அதன்படி, தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது.
புதிய மசூதிக்கு அடுத்த மாதம் 26-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளனர். புதிய மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை நிறுவி 6 மாதங்களான நிலையில், புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது.
புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி படத்தை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் மசூதியின் பின்பகுதியில் மருத்துவமனை இடம்பெறும் வகையில் மாதிரி படம் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த மசூதி ஏற்கனவே இருந்த பாபர் மசூதியை விட பெரிய அளவில் இருக்கும். ஆனால் அதே போன்ற கட்டமைப்பை கொண்டிருக்காது. சூரிய மின்சக்தி வசதியையும், இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக புதிய மசூதி அமையும்.
ஆஸ்பத்திரி
பன்முக சிறப்பு ஆஸ்பத்திரியுடன் நர்சிங் கல்லூரியும், மருத்துவ சார்பு கல்லூரியும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வரைபடங்களை தலைமை கட்டிட கலைஞர் எஸ்.எம். அக்தர் இறுதி செய்துள்ளார்.