நெல்லை தச்சநல்லூரில் வக்கீல் அடித்துக்கொலை; 3 பேர் கைது
1 min read
Lawyer beaten to death in Nellai Dachanallur; 3 people arrested
15/2/2021
நெல்லை அருகே தச்சநல்லூரில் வக்கீல் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வக்கீல் கொலை
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் அஜித் (வயது 25). வக்கீலான இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கோவைக்கு சென்று பழைய காரை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிச் சென்றார். இந்நிலையில் நேற்று காலையில் பக்கத்து ஊரான மானூரை அடுத்த நரியூத்தில் இருந்து அபிஷேகபட்டி செல்லும் மண்பாதையின் அருகில் உள்ள ஓடை முட்புதரில் அஜித் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, மானூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா, மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அஜித்தின் உடல் கிடந்த இடத்தில் சில மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்தன. அங்கு கார் வந்து சென்றதற்கான தடங்களும் பதிந்து இருந்தன. அஜித்தின் பின்னந்தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிதைந்து இருந்தது. எனவே, அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இறந்த அஜித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறைச்சிக்கடை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித்துக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அஜித் இறைச்சிக்கடையும் நடத்தி வந்துள்ளார். பின்னர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அஜித்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள்.
3 பேர் கைது
இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கணபதி மகன் புதியவன், தங்கப்பன் மகன் ஆதி நாராயணன், பாறைகுளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிச்சுமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, அஜித் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உடலை வாங்க மறுத்து தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு நேற்று மாலையில் அஜித்தின் தந்தை பெருமாள், தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை அருகே வக்கீல் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.