July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை-கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கூடாது; – ராமதாஸ் வலியுறுத்தல்

1 min read

The federal government should not abandon the East Coast Railroad project; – Ramadan emphasis

11.4.2021
சென்னை – கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கூடாது – என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு கடற்கரை

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான திட்டங்களில் ஒன்றான சென்னை – கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்போவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்திருக்கிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வணிக நலனை மட்டும் மனதில் கொண்டு கிழக்குக் கடற்கரை ரயில்பாதை கைவிடப்படுவது ஏற்க முடியாததாகும்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து தென்கோடி கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரையை ஒட்டிய வகையில் தொடர்வண்டிப் பாதை அமைக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு ஆகும். அந்தக் கனவை நனவாக்கும் வகையில் தான் பாமகவைச் சேர்ந்த அ.வேலு ரெயில்வேத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தபோது சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை 178 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில்வேப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

லாபம்

கிழக்குக் கடற்கரை ரெயில்பாதை விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை முதல் கடலூர் வரையிலான பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி-கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகவும் ரெயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கிழக்குக் கடற்கரை ரெயில்பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அத்திட்டத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி, திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப அடிப்படையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. திட்டமிடப்பட்டவாறு பணிகள் தொடங்கப்பட்டிருந்தால், கிழக்குக் கடற்கரை ரெயில் பாதை எப்போதோ அமைத்து முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும்.

ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக, காரைக்குடி – கன்னியாகுமரி இடையே பாதை அமைப்பதற்காக செய்யப்படும் முதலீட்டிற்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்காது என்பதையே மீண்டும் மீண்டும் கூறி இத்திட்டத்தைக் கைவிடுவதில் தான் அரசு உறுதியாக உள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், பாமக உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தலை ஏற்று திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டது. இப்போது மீண்டும் அதே காரணத்தைக் கூறி இத்திட்டத்தை கைவிடுவது நியாயமல்ல.

நெரிசல்

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதையில் முதலீடு செய்யும் அளவுக்கு வருவாய் கிடைக்காது என்ற ரெயில்வேத் துறையின் மதிப்பீடு தவறானதாகும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்ல விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் கடுமையான நெரிசல் நிலவி வருகிறது.

இப்பாதையில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிழக்குக் கடற்கரை ரெயில் பாதையை அமைப்பதன் மூலம் தான் சென்னை கன்னியாகுமரி இடையே நெரிசலைக் குறைக்க முடியும். கிழக்குக் கடற்கரையோரத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு சுற்று வட்டப் பாதையில் தொடர்வண்டிகளை இயக்க முடியும்.

துறைமுக சரக்குகள்

அதுமட்டுமின்றி, இந்தப் பாதையில் சுற்றுலாத் தலங்களும், ஆன்மிகத் தலங்களும் இருப்பதால் பயணிகள் ஆதரவுக்கு ஒருபோதும் குறைவு இருக்காது. இவற்றுக்கெல்லாம் மேலாக தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்குகளைக் கொண்டு செல்ல தொடர்வண்டிகள் தேவை.

இப்பாதையில் சரக்கு ரயில் வண்டிகளை இயக்குவதன் மூலமாக மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப் பெற முடியும். எந்த வகையில் பார்த்தாலும் இந்தப் பாதை அவசியத் தேவையாகவும், லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில் அதைக் கைவிடுவது நியாயமல்ல.

எனவே, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும் முடிவை ரெயில்வேத்துறை திரும்பப் பெற வேண்டும்; சென்னை முதல் கடலூர் வரை புதிய பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1200 கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கான நிதியை ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும்.

காரைக்குடி – கன்னியாகுமரி ரெயில்பாதை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதம் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, கிழக்குக் கடற்கரை ரயில்பாதை செயலாக்கம் பெறுவதையும், பணிகள் விரைவுபடுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்’.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.