கர்நாடகத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடங்க அரசு அனுமதி
1 min read
Government gives permission to start covexin vaccine manufacturing company in Karnataka
15.5.2021
கர்நாடகத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தடுப்பூசி உற்பத்தி நிறுவனம்
பெங்களூரு அருகே உள்ள மாலூரில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட நல்ல தொடர்பு வசதிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான அனைத்து ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது.
‘கோவேக்சின்’ தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் தொடங்க நிர்வாக ரீதியான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. அந்த பணிகள் துரிதகதியில் முடிக்கப்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கும்.
சீரம் நிறுவனம்
அதேபோல் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் உள்பட தடுப்பூசி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி நிறுவனங்களை கர்நாடகத்தில் தொடங்க முன்வந்தால் அதற்கு அரசு ஒப்புதல் அளிக்க தயாராக உள்ளது.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.