“4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்”- வானிலை மையம் அறிவிப்பு
1 min read
“Heavy rain in 4 districts” – Meteorological Center announcement
15.5.2021
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (சனிக்கிழமை) காலை புயலாக உருவானது.
புயலுக்கு பெயர்
இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.
4 மாவட்டங்கள்
இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ் தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டவ் தே புயல் காரணமாக, கேரளா, கர்நாடகம், தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.