கொரோனா நிவாரண நிதி உள்பட 5 திட்டங்களை நாளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min read
MK Stalin launches 5 projects tomorrow, including the Corona Relief Fund
2.6.2021
கொனேரானா நிவாரண நிதி 2-வது தவணை உள்பட 5 திட்டங்களை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொரோனாநிவாரண நிதி
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றவுடன் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.
பதவி ஏற்றவுடன் 5 நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதும் ஆகும். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. 2வது தவணையாக ரூ.2 ஆயிரத்தை மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ந் தேதி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
நாளை தொடங்கி வைக்கிறார்
அதன்படி கருணாநிதி பிறந்த நாளையொட்டி நாளை கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை உள்பட 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கருணாநிதியின் பிறந்த நாளை தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்கள் இல்லங்களில் இருந்தபடி கொண்டாடுங்கள் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி மு.க.ஸ்டாலின் 5 திட்டங்களை தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியும் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு எளிமையாக நடைபெறுகிறது.
5 திட்டங்கள் விவரம்
முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 5 திட்டங்கள் விவரம் வருமாறு:-
- கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்.
- 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம்.
- கோயில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் உள்பட பணியாளர்களுக்கு ரூ.4000 நிவாரணம் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட மளிககை பொருட்கள் வழங்கும் திட்டம்.
*கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், நீதிபதிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கும் திட்டம்.
*’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசின் உதவிகள் வழங்கும் திட்டம்.
இதோடு திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி திட்டத்தையும், திருநங்கையருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டங்களையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.