கல்வான் மோதல் ஓராண்டு நிறைவு
1 min read
One year after the Kalwan conflict
15.6.2021
கல்வான் மோதல் நடந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கல்வான் மோதல்
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக சீனா கூறுகிறது.
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்தன. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வந்தது.
இதற்கிடையில், போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்திய-சீன ராணுவ மட்டத்தில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் குவித்து வைத்திருந்த படைகளை பரவலாக திரும்பப்பெற்றுள்ளன.
ஆனாலும், கல்வான் பகுதியில் இருந்து சீன படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படாததால் இந்திய படையினரும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மரியாதை
இந்த நிலையில், இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பகுதியில் மோதல் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்வான் மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு ராணுவம் இன்று மரியாதை செலுத்தியது.
கல்வான் மோதலில் வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் லடாக் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் பகுதியில் இந்திய ராணுவத்தின் ‘பையர் அண்ட் ப்யூரி’ பிரிவின் தளபதி ஆகாஷ் கவுசிக் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.