சிவசங்கர் பாபா டெல்லியில் கைது
1 min read
Sivashankar Baba arrested in Delhi
16.6.2021
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
சிவசங்கர் பாபா
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனராக இருப்பவர் சிவ சங்கர் பாபா. அவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11-ந் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பினார்
இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.