கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு
1 min read
Pregnant women are more vulnerable to corona 2nd wave
17.6.2021
இந்தியாவல் பரவியுள்ள கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோன முதல் அலையை விட இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த 2-வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
1,530 கர்ப்பிணிகள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா முதல் தொற்றை ஒப்பிடுகையில் 2வது அலையில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2வது அலையில் இந்தியாவில் இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 111 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. சதவீத அடிப்படையில் 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
இதுவே, முதல் அலையின்போது, 1,143 கர்ப்பிணிகள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அவர்களில் 162 பெண்களுக்கு (14.2 சதவீதம் பேருக்கு) மட்டுமே தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்துள்ளது. இதேபோல், முதல் அலையில் 0.7 சதவீதமாக (8 பேர் உயிரிழப்பு) இருந்த கர்ப்பிணி பெண்களின் இறப்பு விகிதம், 2வது அலையில் 5.7 சதவீதமாக (22 பேர் உயிரிழப்பு) உள்ளது.
இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையில் கூறியுள்ளது.