நினைவாற்றலில் சாதனை படைத்த 2 வயது புதுவை சிறுமி
1 min read
2-year-old Puducheeri girl who has a record in memory
20.6.2021
நினைவாற்றலில் வியக்க வைக்கும் திறனை வெளிப்படுத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிகிறது.
புதுவை சிறுமி
புதுவை வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த பாலாஜி- பவித்ரா தம்பதியின் 2 வயது மகள் தெயன்ஸ்ரீ. பிறந்த சில மாதங்களிலேயே இந்த குழந்தை பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் செயல்களை அசத்தலாக செய்து காண்பித்தது. அதீத ஞாபக ஆற்றல் பெற்றிருந்த சிறுமி வளர வளர டி.வி.யில் வரும் விளம்பரங்களை அப்படியே நடித்துக்காட்டியது. இது பெற்றோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
11 தலைப்புகளில் போட்டி
சிறுமிக்கு தனித்துவமான திறமை இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் பலவிதமான புத்தகங்களை வாங்கி, அதில் இருப்பதை சொல்லிக் கொடுத்தனர். அதனை திருப்பி கேட்டபோது, சட்டென்று சில நொடிகளில் பதில் கூறி வியப்பை ஏற்படுத்தியது. மகளின் ஞாபக ஆற்றலை வெளிக்கொண்டுவர பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அரியானா மாநிலத்தில் உள்ள இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் 11 தலைப்புகள் கொண்ட கேள்விகளை முன் வைத்து குழந்தைக்கு போட்டியை நடத்தினர். இதில் சிறுமி சிறப்பாக பதில் அளித்தாள்.
சாதனை புத்தகம்
அதாவது வண்ணங்கள், விலங்குகள், பழ வகைகள், தேசிய தலைவர்களின் பெயர்கள் உள்ளிட்ட 9 தலைப்புகளில் சிறுமி தெயன்ஸ்ரீ சிறந்த ஞாபக சக்தியை வெளிப்படுத்தினாள். இதையடுத்து குழந்தைகளுக்கான சாதனையாளர் புத்தகத்தில் சிறுமிக்கு அங்கீகாரம் அளித்து விருதுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அந்த நிறுவனம் பாராட்டியது.
சிறுமி தெயன்ஸ்ரீ 2 வயதில் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளது. சிறுமியின் சாதனைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.