மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு
1 min read
28 per cent increase in internal rates for central government employees
14.7.2021
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி
நாடுமுழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 3 மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதியாதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது.
ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
28 சதவீதமாக உயர்வு
இந்தக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.