கோவை ராணுவப் பிரிவு வளாகத்தில் ‘வெற்றிவேல், வீரவேல்’ முழக்கம்
1 min read
‘Vetrivel, Veeravel’ slogan at the Coimbatore Army Campus
14.7.2021
கோவை மதுக்கரையில் உள்ள ராணுவப் படைப்பிரிவு வளாக நுழைவு வாயிலில் வெற்றிவேல், வீரவேல் முழக்கம் இடம் பெற்றுள்ளது.
வெற்றிவேல்
கோவை மதுக்கரையில் உள்ள ராணுவப் படைப்பிரிவு வளாக நுழைவுவாயிலில் இடம்பெற்றுள்ள வெற்றிவேல், வீரவேல் முழக்கம் தொடக்க காலம் முதல் இருப்பதாக ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரையில் உள்ள ராணுவ படைப்பிரிவு வளாகத்தின் நுழைவு வாயிலில் ‘வெற்றிவேல், வீரவேல்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவு வாயில் புகைப்படத்துடன் அங்கு எழுதப்பட்டுள்ள வாசகத்தைக் குறிப்பிட்டு கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, விவாதங்களை எழுப்பியது.
தமிழரின் வீர முழக்கம்
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டதற்கு, “மதுக்கரையில் உள்ள ராணுவ படைப்பிரிவு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, நுழைவு வாயிலில் அந்த முழக்கம் இடம்பெற்றுள்ளது.
ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் இப்படியான தனித்த வெற்றி முழக்கங்கள் இருக்கும்.
‘வெற்றிவேல், வீரவேல்’ என்பது தமிழரின் வீர முழக்கம் என்பதால், அந்த முழக்கத்தை மதுக்கரை படைப்பிரிவு பயன்படுத்தி வருகிறது. இதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.