தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்
1 min read
An additional 4 NEET examination centers in Tamil Nadu
15.7.2021
தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.
மா.சுப்பிரமணியன் சந்திப்பு
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில், தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேற்று சந்தித்த பிறகு தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
கூடுதலாக 4 தேர்வு மையங்கள்
தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னை சந்தித்து நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் விளக்கினேன். நீட் தேர்வில், பிராந்திய மொழிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்தும் மலையாளம், பஞ்சாபி மொழிகளை சேர்த்தது குறித்தும் விளக்கினேன். ஏற்கனவே தமிழில் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழக மாணவர்களின் நலனுக்காக, விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் கூடுதலாக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது எனவும் மா.சுப்ரமணியத்திடம் விளக்கினேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.