சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
1 min read
Sankaraiah’s 100th Birthday: Congratulations in person to MK Stalin
15.7.2021
சங்கரய்யாவின் 100வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
சங்கரையா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு இன்று (வியாழக்கிழமை) 100-வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சங்கரய்யா குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் தமிழக அரசியலில் மூத்த தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொடக்கக் கால உறுப்பினருமான மதிப்புக்குரிய என்.சங்கரய்யா, 100-வது அகவை காணும் சிறப்பு மிக்க நாள் இன்று (ஜூலை 15).
தமிழக அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி, தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.
8 ஆண்டுகள் சிறைவாசம், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என, இன்னல்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சங்கரய்யா, திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர். தேர்தல் அரசியலில் திமுகவுடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமதிப்புக்குரிய தலைவராவார்.
சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, மதநல்லிணக்க முனைப்பு இவற்றுக்காகத் தலைவர் கருணாநிதியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்க முடியாது. பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் சொத்தாகத் திகழ்கிறார்.
வாழும் வரலாறாக நூறாவது பிறந்த நாள் காணும் சங்கரய்யா, மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி, வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். மதிப்புக்குரிய மூத்த தோழர் சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன். முதல்-அமைச்சர் என்ற முறையில் தமிழக மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.